Monday, November 17, 2014

நாடுபிடிக்கும் ஆசையில் நவாப் நடத்திய நாடகங்கள்


வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதுபோல நவாப் மீண்டும் 1786ல் கிஸ்திகேட்டு தொல்லை தர தொடங்கினார். அதன் காரணமாக சிவகங்கையை கைப்பற்ற திட்டமிட்டார். இராமநாதபுரம் பணிந்தது. சிவகங்கை எதிர்த்தது. மருதுபாண்டியர்கள் கிஸ்திதொகை தர மறுப்பதாக புகார் செய்து சிவகங்கை சீமையை அடக்கி ஒடுக்க கும்பினியாரிடம் படை உதவி வேண்டினார்.ஆனால் அப்போது சென்னையில் ஆளுநராய் இருந்த சர் ஆர்ச்சிபால்டு காம்ப்பெல் (1786-89) காரணமின்றி ஒரு நாட்டின் மீது படையெடுப்பு நடத்த தயங்கினார்.

நவாபோ சிவகங்கை மீது எப்படியும் படை எடுப்பது என்று முடிவு செய்து விட்டதால் கும்பினி மேலிடத்தை சரிக்கட்ட ஏதாவது குயுக்தி முறையைக் கையாள்வது என திட்டமிட்டார் (DR.k.rajayyan "HISTORY OF MADURAI" page 306) . அதை நிறைவேற்ற தக்க தருணம் வரட்டுமென காத்திருந்தார்.
அதற்கு தோதாக பழைய ஆளுநர் மாறிவிட்டு ஜான் ஆலந்து (1789-90) எனும் புதிய ஆளுநர் வந்தார்.

நவாப் ஒரு நாடகத்தை நடத்த தொடங்கினார் ஒரு போலி கடிதத்தை வைத்து.
இந்த நாடகத்தின் கதாநாயகனான 09-05-1789 நாளிட்ட அக்கடிதத்தின் நடுப்பகுதி மட்டும் எஸ்.எம்.கமால் அவர்களின் மாவீரர் மருதுபாண்டியர் எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.

தலையும் வாலுமற்றதாக காட்சி தரும் அக்கடிதத்தை நவாப் கும்பினியாருக்கு அனுப்ப அவர்கள் அதை நம்பி செயல்பட்டனரா அல்லது நவாபிற்கு செலவுவைக்க படையை அனுப்பினார்களா என்பது புலப்படவில்லை.
கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர் வேலுநாச்சியாரோ, அவர் மகள் வெள்ளச்சியோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரின் அதிகாரம் பெற்றவரா என்பது பற்றி அந்நூலில் குறிப்பிடாதது சந்தேக மேகங்கள் படிய சந்தர்ப்பம் தருகிறது.

எழுதியவர் பற்றிய விவரத்துடன் முழுக்கடிதமாக இல்லாவிடினும் அந்நூலாசிரியர் தந்துள்ள அக்கடிதத்தில் உள்ளவை ஆய்வுக்குரியவனவாகும்.
"செய்தி 1 இதற்கு முன்பு நவாபும் நவாப் முத்தப்பார்கானும் வேலுநாச்சியாரை சந்தித்தனர். அப்பொழுது இராணி மருதிருவர் மீது புகார் தெரிவித்தார். செய்தி 2 கொல்லங்குடி நவாப் படையால் அடுத்த நாளே கைப்பற்றப்பட்டது, செய்தி 3 மருதிருவர் மறுபடியும் இராணிக்கு விரோதமாக செயல்படவே வேலுநாச்சி நவாபிற்கு புகார் செய்ய அவரை குத்புதீன்கான் என்பவன் பொறுப்பில் ஒப்படைத்தார். இவ்வளவு செய்தும் மருதிருவர் நடவடிக்கை ஏமாற்றம் தருகிறது"

மேலே கண்டவற்றை ஆழ்ந்து ஆய்வு செய்தால்... செய்தி 1ல் குறிப்பிடப்பெற்ற நவாப் முத்தப்பார்கான் என்று ஒருவர் நவாப் குடும்பத்திலேயே இல்லை (ஆதாரம்: வரலாற்று ஆசிரியர் மீ மனோகரன் அவர்களின் மருதுபாண்டிய மன்னர்கள் புத்தகத்தின் 62ம் பக்கத்திலுள்ள ஆர்க்காட்டு நலாபுகள் வம்சாவளி பட்டியல்).

செய்தி 2ல் சிவகங்கை மீது நவாப் படையெடுத்து வந்து கொல்லங்குடியை கைப்பற்றியதாக வருவது அதுவரை நடந்திராத ஒன்று. எந்த வரலாற்றாசிரியரும் குறிப்பிடவில்லை.

ஆனால் அதன்பின் நவாபிற்காக ஸ்டூவர்ட் கொல்லங்குடியை பிடித்தது. 13-05-1789 ஆம் நாள். கடித தேதியோ 09-05-1789! அவ்வாறெனில் பின்னால் நிகழ்ந்தது முன்பே கடிதத்தில் இடம் பெற்றது எப்படி? எடுத்த படையெடுப்பிற்கு காரணம் காட்ட பின்னால் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் தானே இது?
செய்தி 3ல் கூறப்படும் வாசகம் வேடிக்கையானது. அதில் 'மருது சேர்வைகாரர்கள் எனக்கும் என் அரசாங்கத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வந்ததை நவாப்பிற்கு தெரிவித்தேன். அவரும் என்னை குத்புதீன்கான் பொறுப்பில் வைத்து....' என்று யாரோ ஒரு நவாபிற்கு தெரிவித்ததாக நவாபிற்கே எழுதுகிறார் வேலுநாச்சியார். அவரும் குத்புதீன்கான் பொறுப்பில் வேலுநாச்சியாரை வைத்ததாகவும் எழுதியிருப்பதாக உள்ளது.
அப்படியானால் வேலுநாச்சியார் கடிதத்தில் விளித்த நவாப் யார்?
வேலுநாச்சியாரை குத்புதீன்கான் பொறுப்பில் விட்ட நவாப் யார்? - என்று தெளிவுபடுத்தவில்லை.

இராணியின் புகார் என்பதெல்லாம் நவாப் நடத்திய நாடகமே. உண்மையான காரணம் நவாபிற்கு ஏற்பட்ட பணத்தேவையே. மருதுபாண்டியர் உள்ள தொகையையே கொடுக்க மறுப்பவர்கள், இதில் கிஸ்தியை கூடுதலாக கேட்டால் கொடுக்கவே மாட்டார்கள். இதெல்லாம் தெரிந்த நவாப் சிவகங்கையின் யாரோ ஒரு ராணி பெயரால் நாடகமாடினார்.
கிஸ்திதொகை கேட்டு நவாப் அல்லது ஆங்கில படை சீமைக்கு வந்த போதெல்லாம் அரங்குக்கே வராதவர்கள் வேலுநாச்சியாரும், வெள்ளச்சியும்.
செஞ்சிக்கோட்டை ஏறியவனெல்லாம் தேசிங்கு ராஜனாகிவிடுவானா? ஆவணக்காப்பத்தில் இடம் பெற்ற கடிதம் என்பதால் அதிலுள்ளவற்றையெல்லாம் அரிச்சந்திரன் வாய்மொழிக்கிணையானது என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

வாதத்திற்காக வேலுநாச்சியார் மருதுபாண்டியர்கள் பேரில் புகார் அனுப்பியதாக எடுத்துகொண்டாலும் அதை தன் அண்டை நாட்டு அரசரும் உறவினருமான முத்துராமலிங்க சேதுபதிக்கு அனுப்பியிருக்கலாம். அல்லது மருதிருவர் யாரு பேச்சுக்கு கட்டுபடுவார்களோ அப்படிப்பட்ட மரியாதைக்குரிய திப்புசுல்தானுக்கு அப்புகாரை அனுப்பியிருக்கலாம்.
ஆனால் அவர் அதை யாருக்கு அனுப்பினாராம்?
தன்னுடைய கணவன் உயிரை பறித்த நவாப் முகமதலிக்கே வேலுநாச்சியார் அந்த 'அபய' கடிதத்தை அனுப்பினாராம்!
அதுவும் அவருடன் ஒத்துப்பாடுகிற ஆங்கிலேயரால் பேணிக்காக்கப்பட்ட ஆவணங்களுடன் இடம் பெற்றுள்ளதாம்!
ஆகா வேலிக்கு ஓணான் சாட்சி போல நவாபுக்கு ஆங்கிலேயர் ஆவணம் சாட்சி.

டாக்டர் கதிர்வேல் அவர்கள் தனது A HISTORY OF MARAVAS புத்தகத்தின் 180ம் பக்கத்தில் " eventhough the nawab conducted the yar on the pretext of helping the queen against the marudhus when the latter fled from the country the nawab sought to consolidate his gains.. the queen also was disapponted (நவாப் என்னவோ இராணிக்கு உதவுகிறேன் என்ற பொய்யான காரணத்தை சொல்லிக்கொண்டு மருதுகளுக்கு எதிராக இப்போரை நடத்தினார். மருது சீமையை விட்டேகியதும் நவாப் சிவகங்கையில் தன் இராணுல பலத்தை திரட்ட தொடங்கினார் இந்நிலையில் இராணி வேலுநாச்சியாரும் ஏமாற்றப்பட்டவரானார்)" என நவாப் நாடகத்தின் புதிரை அம்பலமாக்கி விடுகிறார் டாக்டர் கதிர்வேல்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் கோட்டைகள்

மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த கோட்டைகள்:-

1.காளையார்கோயில் கோட்டை
2.கீரனூர்க் கோட்டை
3.கொல்லங்குடிக் கோட்டை
4.இரணமங்கலக் கோட்டை
5.சங்கரபதிக் கோட்டை
6.திருப்புவனம் கோட்டை
7.சோழபுரம் கோட்டை
8.திருப்பத்தூர்க் கோட்டை
9.பிரான்மலைக் கோட்டை
10.கமுதிக்கோட்டை
.
இவற்றில் பலவும் காலப்போக்கில் வெள்ளத்தால் அழிந்து போயின.
மாவட்ட நிர்வாகமும் அவற்றை சீர்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நன்றி: வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன்

சீமை மீட்பு போர்


1772 முதல் 1780 வரை விருப்பாட்சியிலிருந்து விட்டு 1780 ஜூலையில் சிவகங்கை சீமையை மீட்க மருதுபாண்டியர்கள் தலைமையில் படை கிளம்புகிறது.சோழவந்தானில் நடந்த முதல் போரில் பெரியமருது பாண்டியரின் கைவளரிக்கு மல்லாரிராவ் பலியாகிறான். சோழவந்தானில் எளிதில் சீமை மீட்பு படைக்கு வெற்றி கிடைத்து விடுகிறது.

அடுத்து சிலைமானில் மல்லாராவின் தம்பி சின்னராயன் தலை சின்னமருதுபாண்டியரின் கைவளரிக்கு இரையாகிறது.
சிவகங்கைசீமை மீட்புச்சேனைக்கு சிலைமான் வரை எந்த சேதாரமும் இல்லை. அடுத்ததாக முத்தனேந்தலில் முகாமிடுகிறது சீமை மீட்புசேனை.
சிவகங்கை சீமைக்குள் மீட்புசேனையினர் முதன் முதலில் முகாமிட்டது முத்தனேந்தலில் தான். இங்கிருக்கும் போது பல்வேறு சமூக தலைவர்களும் செல்வாக்கு உள்ளவர்களும் தங்கள் படையை மருதுபாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தனேந்தலுக்கு அனுப்பினர்.

மறுநாள் மானாமதுரை போர்.

மருதுபாண்டியர்களின் படையில் இருந்த ஆயிரமாயிரம் வீரர்கள் வெள்ளையரின் பீரங்கிக்கு பலியாகினர். நிலைமை மோசமாவதை கண்ட மருதிருவர் படையினர் சுட தொடங்கினர். வெள்ளையர் படை கணிசமாக குறைய தொடங்கியது. மருது படையில் ஆயிரமாயிரமாய் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டேயிருந்தனர். ஆங்கிலேயரின் மானாமதுரை போர்ப்படை தளபதி மார்ட்டின்ஸ் சீமைமீட்பு சேனையில் இணைந்து கொண்டிருக்கும் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கண்டு மூக்கின் மேல் விரல் வைத்தான். ஆங்கிலேயர் படை தொடர்ந்து தாக்குபிடிக்க முடியாமல் சிதறி ஓடியது.

"நரிவேட்டையாடவந்து இலந்தை முள்ளுத் தைத்து இறந்தவர்க்கு ஒப்பனையாய்" விளங்கிய ஆங்கிலேயரை எண்ணி எள்ளிநகையாடினர் மருதுபாண்டியர்களும் மானாமதுரை மக்களும். மானாமதுரை போரில் சீமை மீட்பு படைக்கு கிடைத்த வெற்றி திடீரென்று கிடைத்ததல்ல. இதற்காக நாட்டு மக்களை ரகசியமாக 8 ஆண்டுகளாக தயார்படுத்தி வந்தனர் மருதிருவர். அதனால் தான் அவர்கள் சீமைக்குள் நுழைந்ததும் மக்கள் ஒருமித்து அவர்களுடன் சேர்ந்து நவாபுக்கு எதிராக போரிட்டனர்.

சக்கந்தி வேங்கை பெரிய உடையாத்தேவர், குடைக்காதுத்தம்பி, புக்குளி வேல்முருகு ஆகிய தளபதிகளுடன் போரில் பங்கு கொண்ட பல்வேறு மக்கள் தலைவர்களை சிவகங்கை சரித்திர அம்மானை பட்டியலிட்டு காட்டுகிறது.
இதோ அந்த பட்டியல், திருப்பூவனம் சங்கிலிபூபன், பொன்னேலிக்கோட்டை பெரியதம்பி, அழகு உடையார், துள்ளுக்குட்டி சேர்வை, வெள்ளிக்கட்டி வயிரவன், அதப்படக்கி சங்கிலி, கருப்பண்ணன் சேர்வை, மருங்கூர்த்தலைவர், முறையூர்ப்பாளையக்காரர், சூரக்குடிபாளையக்காரர், சிலாமேயநாட்டு சொக்கு சேர்வை, வெண்ணிசின்னதம்பி, நாகாடி இராமச்சந்திரன், மல்லாக்கோட்டை ஆண்டியப்பன், வாராப்பூர்பாளையக்க்ரர் சேதுபதியம்பலம், பெரியபிள்ளையம்பலம், காளாப்பூர்ப் பாளையக்காரர், கரிசைப்பட்டு வைத்தியலிங்க தொண்டைமான், சிறுவயல் நாகலிங்கம் சேர்வை, திருப்பத்தூர் வைரவன் சேர்வை, மானாமதுரை நாகலிங்கம், அருங்குளம் ஆறுமுகம் சேர்வை, தண்டியப்பன் சேர்வை, தென்னவராயன் புதுக்கோட்டை பூபன், ஒய்யத்தேவர், உடையார் ஆகிய தலைவர்கள் வசமுள்ள மக்கள் இப்போரில் பெருந்திரளாக பங்குகொண்டனர்.
இவர்கள் தவிர கள்ளர் பெருஞ்சனமும், பிரான்மலைக் கோட்டையிலிருத்த ராணுவத்தினரும் அதிகாரிகளின் கட்டளையை மீறி சீமை மீட்பு போரில் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை எல்லையில் காளாப்பூர் தொடங்கி சேதுநாட்டு எல்லையிலுள்ள பொன்னெலிக்கோட்டை வரையுள்ள பல்வேறு பகுதி மக்களும் கள்ளர், மறவர், அகம்படியார் என்றுமட்டுமல்ல பல்வேறு சமூக மக்களும் பேதாபேதமின்றிக் கலந்து கொண்டதால் தான் இந்த போரில் வெற்றி நெருக்கத்தில் வந்தது.

1780ல் மருது பாண்டியர்கள், நவாப் மற்றும் ஆங்கிலேய படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தி அவர்களை வெளியேற்றியது விடுதலை வேருக்கு நீர் பாய்ச்சிய பெருந்தொண்டு என்று பேராசிரியர் கே.இராஜையன் அவர்கள் தான் எழுதியுள்ள " SOUTH INDIAN REBELLION " என்ற புத்தகத்தின் 228 ம் பக்கத்தில் புகழாரம் சூட்டுகிறார்.

காளையார் கோவிலும் திருப்பத்தூரும்!

மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கில் போடுதல் :-

கி.பி.1801 அக்டோபர் மாதம் 24ம் தேதி தற்போதுள்ள திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு முன் மாமன்னர்களையும் அவர்களோடு சேர்ந்திருந்த புரட்சி வீரர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களையும் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டு கொன்று குவித்தனர். பிணங்களை உரிமை கொண்டாடி யாராவது அடக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டால் அவர்களையும் கலகக்காரராக்கி தூக்கில் போட காத்திருந்தான் கர்னல் ஸ்மித். அதனால் 27.10.1801 வரை யாரும் சடலங்களை பெற முன்வரவில்லை.

மருதுசகோதரர்களை அடக்கம் செய்து சமாதி கட்டுதல், பெருமாள் சேர்வை திருப்பத்தூர் வருதல்:-

மருதுசகோதரர்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதையும் யாரும் ஆங்கிலக் கர்னல் ஸ்மித்துக்கு பயந்த அடக்கம் செய்ய முன்வரவில்லை என்பதையும் அறிந்த பெரிய மருது பாண்டியரின் மகள் வயிற்றுப் பேரன், 18 வயதே நிரம்பிய வீரன் பெருமாள் சேர்வை நரிக்குடி முக்குளத்திலிருந்து தன்னந்தனியாக புறப்பட்டு 27.10.1801 காலை திருப்புத்தூரை வந்தடைந்தார் கர்னல் ஸ்மித்தை தைரியத்துடன் சென்று சந்தித்து தன் தாத்தாக்கள் பெரியமருது சேர்வை, சின்னமருது சேர்வை இருவரையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்டார்.

அடக்கம் செய்தல்:-

கர்னல் ஸ்மித்தும் பெருமாள் சேர்வையைப் பற்றி நன்றாக விசாரித்து அவர் புரட்சி படையை சேர்ந்தவர் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மருதரசர்களை அடக்கம் செய்ய அனுமதித்தான்.
அதன் பிறகு பெருமாள் சேர்வை திருப்புத்தூரில் இருக்கும் உறவினர்களையும் இனத்தார்களையும் சென்று பார்த்து அவர்களை ஒருங்கிணைத்து கொண்டு வந்து (இன்றைய ஸ்விடிஸ் மிசன் மருத்துவமனை வளாகம்) நிறுத்தி பிணக்குவியலை விலக்கி பெரியமருது, சின்னமருது உடல்களை தேடி எடுத்து நீராட்டி அலங்கரித்து திருப்புத்தூருக்கு வடமேற்கில் உள்ள சிங்காரத் தோப்பிற்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். மற்ற சடலங்களை எல்லாம் எடுத்து சென்று பொது இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

சமாதி கட்டுதல்:-

தன் தாத்தாக்களை சிங்காரத்தோப்பில் அடக்கம் செய்த பெருமாள் சேர்வை அடக்கம் செய்த இடத்திலிருந்து கிழக்கே 500 அடி தொலைவில் குடிசை கட்டிக் கொண்டு திருப்புத்தூரிலேயே தங்கி அடக்கம் செய்த இடத்தை பாதுகாத்து நாளடைவில் சமாதி கட்டி வழிபாடு நடத்த தொடங்கினார்.
இரண்டு சமாதிகள் அருகிலும் பெரிய மருது, சின்ன மருது என்ற பெயரில் வில்வமரம் வைத்து வளர்த்தார்.

ஆண்டு தோறும் மருது சகோதரர்களை தூக்கில் போட்டு கொன்ற நாளை நினைவு நாளாக கொண்டு வழிபாடு நடத்தி வந்தார்.

மருதிருவரை அடக்கம் செய்த இடம் :-

வரலாற்றாய்வாளர்கள் மருதரசர்களை எங்கே அடக்கம் செய்தார்கள் என்று தெளிவாக கூறவில்லை. சிலர் காளையார்கோவில் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றும், தலைகளை மட்டும் காளையார்கோவிலில் அடக்கம் செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள். திருப்பத்தூரில் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக நரிக்குடி முக்குளத்திலிருந்து வந்து மருதரசர்களை அடக்கம் செய்த பெருமாள் சேர்வையின் சந்ததியர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். காளையார்கோவிலுக்கு முழு உடலாகவோ, தலைகளை மட்டுமோ எடுத்து சென்று அடக்கம் செய்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் இருந்தால் இந்நாள் வரை வாரிசுரிமை கேட்டு வராத மர்மம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி மருதரசர்கள் திருப்பத்தூர் சிங்காரத்தோப்பில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் அதனால் தான் தொடர்ந்து வழிபாடு செய்வதாகவும் பெருமடாள் சேர்வையின் 5 ஆவது வாரிசு தங்கச்சாமி சேர்வை கூறுகிறார்.

முழு உடலும் திருப்பத்தூரில் தான்:-

முழு உடலும் திருப்பத்தூரில் தான் அடக்கம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாக சிவலிங்கம் கிடைத்ததை காட்டுகிறார் தங்கச்சாமி சேர்வை.
மருதுபாண்டியர் சமாதியை புதுப்பிக்கவும் மேடை கட்டவும் விரும்பி வாணம் தோண்டும் போது சில அடி ஆழத்தில் சிவலிங்கம் புதைத்து கிடந்து எடுக்கப்பட்டது. உடனே அரசுக்கும் அறிவிக்கப்பட்டது. செய்தித்தாள்களிலெல்லாம் கூடப் படத்துடன் வந்திருந்தது.
இந்துமத சாஸ்திரப்படி இறந்தவர்களை புதைக்குமிடத்தில் சிவலிங்கம் நடுவது வழக்கம். அப்படி சிவலிங்கம் நடவேண்டுமானால் இறந்தவர் சிறந்த தலைவராகவும் பிறரால் போற்ற கூடியவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் உடலொச்சம் உடையவர்களாகவோ, உறுப்புகளை இழந்தவர்களாகவோ இருக்க கூடாது.

உடலொச்சம் உள்ளவர்களை புதைக்குமிடத்தில் சிவலிங்கம் நடக்கூடாது.
சிவலிங்கம் திருப்பத்தூரிலுள்ள மருதரசர்கள் சமாதியில் நடப்பட்டிருப்பதால் அவர்கள் உடலில் எந்தவிதக் குறைபாடுகளும் இல்லையென்பதை உணர முடிகிறது. இதிலிருந்து தலைகளை வெட்டி எடுத்து சென்று காளையார்கோயிலில் அடக்கம் செய்தார்கள் என்பது பொய்யாகிறது.

காளையார்கோவிலில் உள்ள சமாதி யாருடையது :-

முத்துவடுகநாத தேவர் அல்லது அவருடன் போரில் இறந்த இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாரது நினைவிடங்கள் எங்கே உள்ளன.
மேலும் மாமன்னர் பெரிய மருதுபாண்டியரால் சிவகங்கை சமஸ்தானத்தின் ஒருநாள் மன்னராக்கப்பட்ட தியாகத்தேர் செய்த குப்பமுத்து ஆசாரி மற்றும் அவரது மனைவியின் நினைவிடம் எங்கே. காளையார்கோயிலில் உள்ள நினைவிடம் இந்த நால்வரில் ஒருவரின் நினைவிடமாக தான் இருக்க வேண்டும்.

##புலவர் தேவரம்பூர் மாணிக்கம் அவர்களின் ""விடுதலை வேள்வியில் வீரத் திலகங்கள் வரலாறும் நினைவு வளாகமும்"" என்ற புத்தகத்திலிருந்து.

காளையார்கோயில் இராஜகோபுரம் உருவாவதற்காக நடந்த தொண்டுகளில் ஒன்று


நாட்டரசன்கோட்டையிலிருந்து 2 மைல் தொலைவில் குருவாட்டிப்பட்டி எனும் சிற்றூர் உள்ளது. இவ்வூரை சேர்ந்த ஆதிதிராவிட துறவி ஒருவர் கொல்லங்குடியிலிருந்தார். எப்போதும் மொட்டை தலையுடன் காட்சியளித்த அவரை மக்கள் மொட்டையப்பரதேசி என்றே அழைத்தனர்.

காளையார்கோயில் ராஜகோபுர திருப்பணிக்காக மேலூர் பக்கமுள்ள கருமலையிலிருந்து கற்களை ஏற்றி வந்த வண்டிகள் பூங்குடி, நாட்டரசன்கோட்டை, குருவாட்டிபட்டி, கொல்லங்குடி வழியாக காளையார்கோயில் போய் கொண்டிருந்தன.

இதை கண்ணுற்றார் மொட்டைய பரதேசி. எவ்வளவு பெரிய திருப்பணி இதிலே நமது பங்கும் ஒருதுளியாவது இருக்க வேண்டாமா? என்று அவர் உள்ளத்தில் தோன்றியது. அதன் விளைவு? கொல்லங்குடியில் வண்டிகள் செல்லும் சாலைக்கருகே ஒரு கூரை காவணத்தை போட்டார். பலரிடம் கையேந்தி வாங்கிய பணத்தில் ஒரு தண்ணீர் பந்தல் தொடங்கினார்.
"கடுமையான பாரத்தை ஏற்றிக்கொண்டு வருகிற வண்டிக்காரர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதலை தருகிறேன்" என்று சொல்வது போல் அமைந்தது அந்த தண்ணீர்ப்பந்தல். அவர் வழங்கிய நீரும் மோரும் வெயிலில் களைத்து வருகிற வண்டிக்காரர்களுக்கு அமுதமாக சுவைத்தன. சிலசமயம் பானகமும் வழங்கினார். இவ்வாறாக மோரும் பானகமும் அருந்திய வண்டிக்காரர்கள் கொஞ்சம் அயர்ந்துவிட்டனர். வண்டி குறித்த நேரத்தில் போய் சேர்வது இதனால் தாமதப்பட்டது.

காளையார்கோயிலில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த சின்னமருது பாண்டியருக்கு உடனடியாக காரணம் புரியவில்லை. கொல்லங்குடியில் தான் சுணக்கம், அதுவும் மொட்டையப்பரதேசியினால் தான் என்று தெரிய வருகிறது.
சின்னவர் ஆத்திரமாக புறப்பட்டார். இதை கேள்விப்பட்ட மொட்டையப்பரதேசி தாம் அரசரிடம் அனுமதி பெறாமல் தண்ணீர்பந்தல் வைத்து அதன் விளைவாக திருப்பணி தாமதப்படத் தான் காரணமானதால் தண்டனைக்கு ஆளாக நேருமோ என அஞ்சி கொல்லங்குடியிலிருந்து குருவாட்டிப்பட்டிக்கு ஓடிவிட்டார்.

சின்னவர் கொல்லங்குடி வந்தடைந்ததும் வண்டிக்காரர்கள் சோர்வாக அங்கிருந்து வண்டிகளை கிளப்பத் தயாராவதை பார்த்து நிறுத்தி விசாரித்தார்.
அவர் கொடுக்கிற மோர் பானகத்தினால் தான் தாங்கள் களைப்பு நீங்கி காளையார்கோயில் வரை தெம்புடன் வண்டியை ஓட்டி வர முடிகிறது என்றும் அவர் இன்று இல்லாதது தங்களுக்கு பெரும் பாதிப்பு என்றும் சின்ன பாண்டியரிடம் வண்டிக்காரர்கள் தெரிவித்தனர்.உடனே சின்னவர் நாம் செய்யவேண்டியதை அன்றோ அவர் செய்திருக்கிறார் என்று அகமகிழ்ந்து "மொட்டையப்பரதேசி எப்போதும் போல் தண்ணீர்ப்பந்தல் நடத்தலாம். உடனே சென்று அவரை அழைத்து வாருங்கள்" என்றார்.

மொட்டைப்பரதேசி அழைத்துவரப்பட்டார். அஞ்சியபடி தம் முன் வந்து நின்ற அவரிடம் சின்னப்பாண்டியர் "இனி நீர் தொடர்ந்து தண்ணீர்ப்பந்தல் நடத்தலாம். இதற்காக அருகிலேயே ஊருணி அமையும். தண்ணீர்பந்தலுக்கு நிரந்தரக் கட்டிடமாகவும் நீர்தங்கி கொள்ளவும் உமது பெயரால் இங்கு ஒரு மடம் நிறுவப்படும். தண்ணீர்பந்தல் பணத்தட்டின்றி நடைபெற குருவாட்டிப்பட்டியில் நிலம் மானியமாக விடப்படுகிறது" என்று கூறியதும் தன்னுடைய சிறு தொண்டையும் ஒரு பொருட்டாக கருதி போற்றும் சின்னப்பாண்டியரின் பெருந்தன்மையினால் மனம் உருகி அந்த துறவி கைகூப்பி நன்றியினை தெரிவித்தார்.

கொல்லங்குடி ஊருக்கு வடபுறம் மொட்டையப்பரதேசி மடம் என்ற பெயரால் வழங்கப்படும் மண்டபமும் ஊருணியும் சாதி, மத பாகுபாடின்றி இன்றைக்கும் செழிப்பாக பொதுமக்களின் தாகத்தையும், களைப்பையும் தீர்த்து வருகின்றது.

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ளைகள் பட்டியல்


பெரிய பாண்டியருக்கு இராக்காத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள், ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள் ஆகிய ஐந்து மனைவிகள் இருந்தனர்.
இவர்கள் அனைவரின் சிலைகளும் நரிக்குடி சத்திரத்தின் பின்புறமுள்ள வளாகத்தில் சிறு சிறு மண்டபங்களில் உள்ளன.

முதல் மனைவி இராக்காத்தாள் வாரிசுகள் :-

இவருக்கு குடைக்காதுடையார், முத்துச்சாமி, உடையணன், முள்ளிக்குட்டி சாமி ஆகிய 4 மகன்கள். குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் கொல்லப்பட்டார். முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு முன்னரே இயற்கை மரணம் அடைந்தார். இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர்.
இவ்வூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் 'பெரிய மருது' என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன. இராக்காத்தாள் அவர்களின் மூன்றாவது மகன் உடையணனும், நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர்.

பெரியபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் வாரிசுகள் :-
கருப்பாயி ஆத்தாளுக்கு கறுத்த தம்பி என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி ஆத்தாள், மருதாத்தாள் என்ற 3 குழந்தைகள். கருப்பாயி ஆத்தாள் முத்தூர் அரண்மனையில் வசித்து வந்தார். சிவகங்கை காளையார்கோயில் சாலையில் கொல்லங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே ஒருமைல் தூரம் நடந்து சென்றால் முத்தூரை அடையலாம். முத்துப்போன்ற நெல்மணிகள் விளைவிற்கு பஞ்சமில்லாத ஊர் இதுவென்பதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது இராணுவ நினைவுகள் புத்தகத்தின் VOL 1 பக்கம் 125 ல் எழுதியுள்ளார்.

முத்தூர் அரண்மனை ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது. அரண்மனை அரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாக தெரிகிறது. பூசை அறைதவிர பிறபகுதிகள் இடிந்து போய்விட்டதால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாய்சேய் நலவிடுதி, சத்துணவுமையம் முதலியன கட்டப்பட்டுள்ளன. அக்கட்டட வளாகங்களிடையே அரண்மனையின் பழைய செங்கல் தளவரிசையை காணமுடிகிறது. பரமக்குடி போர் முடிந்து திரும்பிய மருதிருவரும் படையினரும் சிறுவயல் சென்றடையும் முன் முத்தூர் அரண்மனையில் ஒரு நாள் தங்கி சென்றதாக வரலாறு உள்ளது. அத்தனை பேர் தங்கி செல்லும் அளவுக்கு முத்தூர் அரண்மனை அவ்வளவு பெரியதாய் இருந்திருக்கிறது.  கருப்பாயி ஆத்தாளின் ஒரே மகனான கறுத்தப்பாண்டியனை 1801 ல் விடுதலைப்போரில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.

மூன்றாவது மனைவி பொன்னாத்தாளுக்கு பிள்ளைகள் இல்லை.
பொன்னாத்தாள் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறந்த நரிக்குடி முக்குலத்தை சேர்ந்த உறவுக்கார பெண் ஆவார்.

நான்காவது மனைவி ஆனந்தாயி ஆத்தாள் கொல்லங்குடியில் தனக்கென்று கட்டப்பட்ட மாளிகையில் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் பிறந்து இறந்து போய் விட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஐந்தாவது மனைவி மீனாட்சி ஆத்தாள் வாரிசுகள்:-

மீனாட்சி ஆத்தாளுக்கு கவண்டன் கோட்டை துரை, தங்கம் என்ற பெரியதங்கம் என இரு பிள்ளைகள். மீனாட்சி ஆத்தாள் தனது தந்தையின் அரண்மனை உள்ள கவண்டன் கோட்டையில் தான் தன் மகள் தங்கத்துடன் தங்கி இருந்தார். 1794 ல் பரமக்குடி போரில் கவண்டன்கோட்டை துரை அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர் ந.சஞ்சீவி அவர்கள் தனது மருதிருவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் கணவர் தூக்கிலிடப்பட்டதை அறிந்ததும் மகள் பெரிய தங்கத்துடன் தந்தையின் ஊரைவிட்டு கிளம்பிய மீனாட்சியாத்தாள் நரிக்குடியை அடுத்த வேலங்குடியில் குடியேறிவிட்டார்.
பெரியதங்கத்திற்கு இருபுதல்வர்களும் ஆதி வீரலட்சுமி என்ற சின்னதங்கமும் பிறந்தனர். ஆதிவீரலட்சுமி இந்த வேலங்குடிக்கு 3 கி.மீ தூரத்தில் உள்ள சீனிக்காரனேந்தலில் குடியேறினார். இவரது வழியினர் வேலங்குடி மற்றும் சீனிக்காரனேந்தலில் இன்றளவும் வசித்து வருகின்றனர்.

படம் :- நரிக்குடி சத்திரம் பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் அவர்களின் நினைவாலயம்.

Saturday, November 15, 2014

மருதுவால் கட்டப்பட்ட புதிய கோபுரம்! - வெல்ஷ்

காளையார்கோயிலுக்கு பலமுறை வந்துள்ள வெல்ஷ் தன் நூலில் இணைத்துள்ள காளையார்கோயில் வரைபடத்தில் "மருதுவால் கட்டப்பட்ட புதிய கோபுரம்" (the new pagoda built by murdoo (on the plan of caliacole) col J.welsh MILITARY REMINICENCES VOL 1 plan facing page 122) என குறிப்பிட்டுள்ளான்.

இந்த இராஜகோபுரத்தை மருதுபாண்டியர்கள் கட்டியகோபுரம் என்பதை விட கட்டிக்காத்த கோபுரம் என்று சொல்வதே சாலப்பொருத்தமுடையது.
உலகத்தமிழராயாச்சி நிறுவன வெளியீடு ஒன்றில் "குறிப்பிட்ட காலத்திற்குள் சரணடையாவிட்டால் காளையார்கோயில் பெரிய கோபுரம் தகர்க்கப்படும் என்று கர்னல் அக்னியு அறிவிக்க அந்த கோபுரத்தை காத்திட வெள்ளைமருது தன் வாழ்வைத்தியாகம் செய்தார்" ( col.agnew proclaimed that if he did not surrender with in a period, the big tower will be destroyed. so vella maruthu sacrificed his life in order to save the lofty gopuram - KALAIYARKOYIL'' -vide: DR.S.V.Subramanian & DR.G.RAJENDRAN (ed) "HERITAGE OF THE TAMILS -TEMPLE ARTS page 25"") என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தியாக நிகழ்ச்சி பற்றி 03.01.1970 தேதியிட்ட THE MAIL ஆங்கில நாளேட்டில் கட்டுரையும் வெளிவந்துள்ளது. அக்னியுவின் ஆலயக்கோபுர தகர்ப்பு அறிவிப்பு உலகுக்கு உண்மையை அறிவிக்கும் ஒரு அமில சோதனையாக அமைந்து விட்டது.

ஒரே குழந்தைக்கு இரண்டு பெண்கள் நான்தான் பெற்ற அன்னை குழந்தை என்னிடம் தரப்பட வேண்டும் என்று நீதிகேட்டு மன்னன் சாலமோனிடம் சென்றபோது அந்த மன்னன் ஒரு சோதனை வைத்து தீர்ப்பளித்தான்.
குழந்தையை இரு கூறாக வெட்டி ஆளுக்கொருபாதியாக கொடுங்கள் என்றான் மன்னன்.

போலி தாய் வெட்டுப்படட்டும் என்று அலட்டி கொள்ளாமலிருந்தாள்.
ஆனால் உண்மையான தாய் துடித்து போய் குழந்தை அவளிடம் போனாலும் பரவாயில்லை. வெட்டிவிடாதீர்கள் என்று கெஞ்சினாள். அவள்தான் உண்மையான தாய் என அந்த சோதனைமூலம் நிரூபணமாகியது.
கோபுரத்தை தகர்க்கிறேன் எனும் அக்னியுவின் அறிவிப்பை கேட்டு இராஜகோபுரத்தை கட்டியவர் என இட்டுக்கட்டி சொல்லப்படுகிறவர்கள் ஏன் தடுக்க முன்வரவில்லை? அவர் ஏன் வரப்போகிறார்? உண்மையில் அதை கட்டியவர் அல்லவா துடிப்பார்? அதனால் தான் மருதுபாண்டியர்கள் துடித்து போனார்கள். ஆயிரம் ஆதாரங்கள் எதற்கு? இது ஒன்று போதாதா?
பெற்றவளுக்கு தான் பிள்ளையின் அருமை தெரியும். கட்டியவர்களுக்கு தான் கோபுரத்தின் மகிமை புரியும். இந்த உண்மையை மேலும் உறுதி செய்யும் வண்ணம் சென்ற குடமுழுக்கின் பின் சமஸ்தான தேவஸ்தானம் இராஜகோபுர வாயிலின் தென்புறச் சுவரில் மேற்கண்ட தகவல் உள்ள கல்வெட்டு கொண்ட வெள்ளை சலவைக் கல்லை பதித்துள்ளது.

நன்றி: வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன்

மாமன்னர் சின்னமருது பாண்டியரின் பெண்டு, பிள்ளைகள்!


மாமன்னர் சின்ன மருதுபாண்டியருக்கு வீராயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள், வைராத்தாள் ஆகிய மூன்று மனைவியராவர். இரண்டாவது, மூன்றாவது மனைவியரின் பிள்ளைகள் இருந்ததாக எந்த வரலாற்றாசிரியரும் குறிப்பிடவில்லை.

முதல் மனைவி வீராயி ஆத்தாளுக்கு சிவத்த தம்பி (சமாலி உடையார்), சிவஞானம், முத்துவடுகு என்ற துரைச்சாமி என மூன்று மைந்தர்கள் மட்டுமே.
முதல் இரு மைந்தர்களுக்கூம் விடுதலைப்போர் காலகட்டத்திற்கு முன்பே திருமணமாகிவிட்டது.

சிவத்த தம்பியின் மைந்தன் பெயர் முத்துச்சாமி, சிவத்த தம்பியும், அவரது மைந்தர், முத்துச்சாமியும் மற்றும் சிவஞானமும் 1801 ல் விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காக ஆங்கிலேயர்களால் தூக்கிலேற்றப்பட்டனர்.

15 வயதான துரைசாமி கடைசியாக பிடிபட்டு நாடு கடத்தப்பட்டார்.
கடைசிமகனான அவரை நாடு கடத்திய செய்தியை வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் இராக்கப்பன் அவர்களும் தனது அறிக்கையில் துரைசாமி பற்றி கடைசி செய்தி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையின்படி "துரைசாமி எந்த வாரிசையும் விட்டு செல்லவில்லை. உறுதிக்கோட்டையில் சின்னமருதுபாண்டியர் கட்டிய அரண்மனைகள் அவரது மகன்களான சிவத்ததம்பி, சிவஞானம் ஆகிய இருவரது வாரிசுகளால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு வந்தன். துரைச்சாமிக்கு வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களும் உரிமை கொண்டாடி உறுதிக்கோட்டை அரண்மனையில் குடியேறியிருப்பார்கள்.

எனவே 1821 ல் பினாங்கு தீவிலிருந்து திரும்பிய துரைசாமி உறுதிக்கோட்டை வரவில்லை. மதுரை வந்து அங்கேயே தங்கிவிட்ட துரைசாமி மணம் செய்து கொண்டோ அல்லது மணம் செய்து கொள்ளாமலோ காலங்கழித்து அங்கேயே வாரிசின்றி காலமானார்" எனத் தெரிகிறது.