Saturday, November 15, 2014

தீ பாய்ந்த அம்மன்!

கணவனும் மனைவியுமான இருவர் பிழைப்பு தேடி தங்கள் ஊரான கோசுகொண்டுவை விட்டு புறப்பட்டு வந்தவர்கள் வழியில் மருதுபாண்டியர்களின் நரிக்குடி சத்திரத்தில் தங்கியிருந்தனர்.
நேரமோ நள்ளிரவு.அவர்களின் நாய் மட்டுமே அவர்களுக்கு துணை.
அந்த நேரம் அங்கு வந்த கயவர் கூட்டம் நயவஞ்சகத் திட்டம் ஒன்றினை தீட்டியது.

கணவரிடம் நயமாக பேகி பேச்சுக் கொடுத்து கொண்டே காட்டு பக்கம் கூட்டி சென்று நாடான் ஊருணி எனும் குளத்தருகில் கொன்று போட்டனர்.
சென்ற கணவன் திரும்பாதது கண்டு மனைவி துடித்தாள்.
நாய் வழி காட்டிட கடைசியில் அது நின்ற இடத்தில் கணவனின் பிணத்தை கண்டாள்.நரிக்குடி சத்திரத்திற்கு திரும்பி வந்து நடந்த துயரை சொல்லி புலம்பினாள். அங்கிருந்தவர்கள் மன்னரிடம் சென்று முறையிட சொன்னார்கள்.சிவகங்கை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

கண்ணீரும் கம்பலையுமாக தம் முன் நிற்கும் பெண்ணை கண்ட மருதரசர்கள் ''உற்ற துன்பம் என்ன?'' என்று உசாவி முடிக்கும் முன்பே ''அரசே பிழைக்க வழி தேடி வந்தால் உயிருக்கே உலை வைத்து விட்டார்களே! இந்த நாட்டில் ஊருக்கு ஊர் கொலைக்களம் என்று தெரிந்திருந்தால் வேறெங்காவது போயிருப்போமே! இது தான் உங்கள் நாட்டில் நீதியா?'' என்று கண்ணகி போல் தன் ஆவேசத்தை கொட்டி தீர்த்தாள்.

கேட்ட பார்த்திபர்கள் அவளையும் உடன் அழைத்துக் கொண்டு கொலைபட்ட இடம் நோக்கி விரைந்தனர். அதற்குள் கயவர்கள் பிடிபட்டனர். உரிய விசாரணைக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டது. தாயினும் மேலாக பார்த்துக் கொள்வதாக பாண்டியர்கள் கூறியும் அப்பெண் மறுத்து தன் கணவனுடன் தீப் புகுந்தாள்.

தீப்புகும் முன் தன் சேலையும், கருகமணி, காதோலையும் கருகாதிருக்குமென்று உரைத்து விட்டுத் தீப்புகுந்தாள். உடல் கருகிய பின் கருகாதிருந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு மருதிருவர் குடும்பத்தினரால் நரிக்குடி முக்குளத்தில் பாதுகாக்கப்பட்டன.

கள ஆய்வுக்கு சென்ற போது அப்பெண்ணை தீப்பாய்ந்த அம்மனாக போற்றி அவர் சிதையிலிருந்து எரியாமலிருந்து எடுத்ததாக கூறப்படும் கீழ்க்கண்டவற்றை நார்ப்பெட்டியில் பரணில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் விசேட நாட்களில் அதை எடுத்து வீட்டு பெண்கள் வழிபடுவர் என்றும் மருதரசர்களின் வாரிசுதாரர்கள் கூறினர்.

பெரிய மருதுபாண்டியர்கள் வழியினரான முக்குளம் முன்னால் கர்ணம் முத்துக்கருப்பன் சேர்வை இல்லத்தில் உள்ள அந்த நார்ப்பெட்டியில் வைத்துப் போற்றிக் காக்கப் படுபவை :-

1.பதினாறு முழ வெள்ளைப்புடவை.
2.கருகமணி.
3.காதோலை.
4.கணவர் அணிந்திருந்த வட்டுடை.
5.ஒரு நீளமான பை.
6.வெட்டப் பயன்படுத்திய அரிவாள்.
7.இவற்றை கட்டிய கொச்சக்கயிறு ஆகியவை.

அன்று மருதுபாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் சில துரோகிகளின் தூண்டுதலின் பேரில் கயவர்கள் செய்த கொடூரச் செயல்களினால் ஒரு பத்தினிப் பெண் பாதிக்கப்பட்டாள்.

இன்று மருதரசர்களின் அடையாளங்களை அழிக்க பல துரோகிகள் முயன்று கொண்டேயிருக்கின்றனர். எத்தனை நாள் தான் துரோகிகளின் ஆட்டம் நிலைக்கும் என பார்க்கலாம்.

0 comments:

Post a Comment