Monday, November 17, 2014

காளையார் கோவிலும் திருப்பத்தூரும்!

மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கில் போடுதல் :-

கி.பி.1801 அக்டோபர் மாதம் 24ம் தேதி தற்போதுள்ள திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு முன் மாமன்னர்களையும் அவர்களோடு சேர்ந்திருந்த புரட்சி வீரர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களையும் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டு கொன்று குவித்தனர். பிணங்களை உரிமை கொண்டாடி யாராவது அடக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டால் அவர்களையும் கலகக்காரராக்கி தூக்கில் போட காத்திருந்தான் கர்னல் ஸ்மித். அதனால் 27.10.1801 வரை யாரும் சடலங்களை பெற முன்வரவில்லை.

மருதுசகோதரர்களை அடக்கம் செய்து சமாதி கட்டுதல், பெருமாள் சேர்வை திருப்பத்தூர் வருதல்:-

மருதுசகோதரர்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதையும் யாரும் ஆங்கிலக் கர்னல் ஸ்மித்துக்கு பயந்த அடக்கம் செய்ய முன்வரவில்லை என்பதையும் அறிந்த பெரிய மருது பாண்டியரின் மகள் வயிற்றுப் பேரன், 18 வயதே நிரம்பிய வீரன் பெருமாள் சேர்வை நரிக்குடி முக்குளத்திலிருந்து தன்னந்தனியாக புறப்பட்டு 27.10.1801 காலை திருப்புத்தூரை வந்தடைந்தார் கர்னல் ஸ்மித்தை தைரியத்துடன் சென்று சந்தித்து தன் தாத்தாக்கள் பெரியமருது சேர்வை, சின்னமருது சேர்வை இருவரையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்டார்.

அடக்கம் செய்தல்:-

கர்னல் ஸ்மித்தும் பெருமாள் சேர்வையைப் பற்றி நன்றாக விசாரித்து அவர் புரட்சி படையை சேர்ந்தவர் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மருதரசர்களை அடக்கம் செய்ய அனுமதித்தான்.
அதன் பிறகு பெருமாள் சேர்வை திருப்புத்தூரில் இருக்கும் உறவினர்களையும் இனத்தார்களையும் சென்று பார்த்து அவர்களை ஒருங்கிணைத்து கொண்டு வந்து (இன்றைய ஸ்விடிஸ் மிசன் மருத்துவமனை வளாகம்) நிறுத்தி பிணக்குவியலை விலக்கி பெரியமருது, சின்னமருது உடல்களை தேடி எடுத்து நீராட்டி அலங்கரித்து திருப்புத்தூருக்கு வடமேற்கில் உள்ள சிங்காரத் தோப்பிற்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். மற்ற சடலங்களை எல்லாம் எடுத்து சென்று பொது இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

சமாதி கட்டுதல்:-

தன் தாத்தாக்களை சிங்காரத்தோப்பில் அடக்கம் செய்த பெருமாள் சேர்வை அடக்கம் செய்த இடத்திலிருந்து கிழக்கே 500 அடி தொலைவில் குடிசை கட்டிக் கொண்டு திருப்புத்தூரிலேயே தங்கி அடக்கம் செய்த இடத்தை பாதுகாத்து நாளடைவில் சமாதி கட்டி வழிபாடு நடத்த தொடங்கினார்.
இரண்டு சமாதிகள் அருகிலும் பெரிய மருது, சின்ன மருது என்ற பெயரில் வில்வமரம் வைத்து வளர்த்தார்.

ஆண்டு தோறும் மருது சகோதரர்களை தூக்கில் போட்டு கொன்ற நாளை நினைவு நாளாக கொண்டு வழிபாடு நடத்தி வந்தார்.

மருதிருவரை அடக்கம் செய்த இடம் :-

வரலாற்றாய்வாளர்கள் மருதரசர்களை எங்கே அடக்கம் செய்தார்கள் என்று தெளிவாக கூறவில்லை. சிலர் காளையார்கோவில் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றும், தலைகளை மட்டும் காளையார்கோவிலில் அடக்கம் செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள். திருப்பத்தூரில் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக நரிக்குடி முக்குளத்திலிருந்து வந்து மருதரசர்களை அடக்கம் செய்த பெருமாள் சேர்வையின் சந்ததியர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். காளையார்கோவிலுக்கு முழு உடலாகவோ, தலைகளை மட்டுமோ எடுத்து சென்று அடக்கம் செய்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் இருந்தால் இந்நாள் வரை வாரிசுரிமை கேட்டு வராத மர்மம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி மருதரசர்கள் திருப்பத்தூர் சிங்காரத்தோப்பில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் அதனால் தான் தொடர்ந்து வழிபாடு செய்வதாகவும் பெருமடாள் சேர்வையின் 5 ஆவது வாரிசு தங்கச்சாமி சேர்வை கூறுகிறார்.

முழு உடலும் திருப்பத்தூரில் தான்:-

முழு உடலும் திருப்பத்தூரில் தான் அடக்கம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாக சிவலிங்கம் கிடைத்ததை காட்டுகிறார் தங்கச்சாமி சேர்வை.
மருதுபாண்டியர் சமாதியை புதுப்பிக்கவும் மேடை கட்டவும் விரும்பி வாணம் தோண்டும் போது சில அடி ஆழத்தில் சிவலிங்கம் புதைத்து கிடந்து எடுக்கப்பட்டது. உடனே அரசுக்கும் அறிவிக்கப்பட்டது. செய்தித்தாள்களிலெல்லாம் கூடப் படத்துடன் வந்திருந்தது.
இந்துமத சாஸ்திரப்படி இறந்தவர்களை புதைக்குமிடத்தில் சிவலிங்கம் நடுவது வழக்கம். அப்படி சிவலிங்கம் நடவேண்டுமானால் இறந்தவர் சிறந்த தலைவராகவும் பிறரால் போற்ற கூடியவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் உடலொச்சம் உடையவர்களாகவோ, உறுப்புகளை இழந்தவர்களாகவோ இருக்க கூடாது.

உடலொச்சம் உள்ளவர்களை புதைக்குமிடத்தில் சிவலிங்கம் நடக்கூடாது.
சிவலிங்கம் திருப்பத்தூரிலுள்ள மருதரசர்கள் சமாதியில் நடப்பட்டிருப்பதால் அவர்கள் உடலில் எந்தவிதக் குறைபாடுகளும் இல்லையென்பதை உணர முடிகிறது. இதிலிருந்து தலைகளை வெட்டி எடுத்து சென்று காளையார்கோயிலில் அடக்கம் செய்தார்கள் என்பது பொய்யாகிறது.

காளையார்கோவிலில் உள்ள சமாதி யாருடையது :-

முத்துவடுகநாத தேவர் அல்லது அவருடன் போரில் இறந்த இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாரது நினைவிடங்கள் எங்கே உள்ளன.
மேலும் மாமன்னர் பெரிய மருதுபாண்டியரால் சிவகங்கை சமஸ்தானத்தின் ஒருநாள் மன்னராக்கப்பட்ட தியாகத்தேர் செய்த குப்பமுத்து ஆசாரி மற்றும் அவரது மனைவியின் நினைவிடம் எங்கே. காளையார்கோயிலில் உள்ள நினைவிடம் இந்த நால்வரில் ஒருவரின் நினைவிடமாக தான் இருக்க வேண்டும்.

##புலவர் தேவரம்பூர் மாணிக்கம் அவர்களின் ""விடுதலை வேள்வியில் வீரத் திலகங்கள் வரலாறும் நினைவு வளாகமும்"" என்ற புத்தகத்திலிருந்து.

0 comments:

Post a Comment