Monday, November 17, 2014

சீமை மீட்பு போர்


1772 முதல் 1780 வரை விருப்பாட்சியிலிருந்து விட்டு 1780 ஜூலையில் சிவகங்கை சீமையை மீட்க மருதுபாண்டியர்கள் தலைமையில் படை கிளம்புகிறது.சோழவந்தானில் நடந்த முதல் போரில் பெரியமருது பாண்டியரின் கைவளரிக்கு மல்லாரிராவ் பலியாகிறான். சோழவந்தானில் எளிதில் சீமை மீட்பு படைக்கு வெற்றி கிடைத்து விடுகிறது.

அடுத்து சிலைமானில் மல்லாராவின் தம்பி சின்னராயன் தலை சின்னமருதுபாண்டியரின் கைவளரிக்கு இரையாகிறது.
சிவகங்கைசீமை மீட்புச்சேனைக்கு சிலைமான் வரை எந்த சேதாரமும் இல்லை. அடுத்ததாக முத்தனேந்தலில் முகாமிடுகிறது சீமை மீட்புசேனை.
சிவகங்கை சீமைக்குள் மீட்புசேனையினர் முதன் முதலில் முகாமிட்டது முத்தனேந்தலில் தான். இங்கிருக்கும் போது பல்வேறு சமூக தலைவர்களும் செல்வாக்கு உள்ளவர்களும் தங்கள் படையை மருதுபாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தனேந்தலுக்கு அனுப்பினர்.

மறுநாள் மானாமதுரை போர்.

மருதுபாண்டியர்களின் படையில் இருந்த ஆயிரமாயிரம் வீரர்கள் வெள்ளையரின் பீரங்கிக்கு பலியாகினர். நிலைமை மோசமாவதை கண்ட மருதிருவர் படையினர் சுட தொடங்கினர். வெள்ளையர் படை கணிசமாக குறைய தொடங்கியது. மருது படையில் ஆயிரமாயிரமாய் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டேயிருந்தனர். ஆங்கிலேயரின் மானாமதுரை போர்ப்படை தளபதி மார்ட்டின்ஸ் சீமைமீட்பு சேனையில் இணைந்து கொண்டிருக்கும் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கண்டு மூக்கின் மேல் விரல் வைத்தான். ஆங்கிலேயர் படை தொடர்ந்து தாக்குபிடிக்க முடியாமல் சிதறி ஓடியது.

"நரிவேட்டையாடவந்து இலந்தை முள்ளுத் தைத்து இறந்தவர்க்கு ஒப்பனையாய்" விளங்கிய ஆங்கிலேயரை எண்ணி எள்ளிநகையாடினர் மருதுபாண்டியர்களும் மானாமதுரை மக்களும். மானாமதுரை போரில் சீமை மீட்பு படைக்கு கிடைத்த வெற்றி திடீரென்று கிடைத்ததல்ல. இதற்காக நாட்டு மக்களை ரகசியமாக 8 ஆண்டுகளாக தயார்படுத்தி வந்தனர் மருதிருவர். அதனால் தான் அவர்கள் சீமைக்குள் நுழைந்ததும் மக்கள் ஒருமித்து அவர்களுடன் சேர்ந்து நவாபுக்கு எதிராக போரிட்டனர்.

சக்கந்தி வேங்கை பெரிய உடையாத்தேவர், குடைக்காதுத்தம்பி, புக்குளி வேல்முருகு ஆகிய தளபதிகளுடன் போரில் பங்கு கொண்ட பல்வேறு மக்கள் தலைவர்களை சிவகங்கை சரித்திர அம்மானை பட்டியலிட்டு காட்டுகிறது.
இதோ அந்த பட்டியல், திருப்பூவனம் சங்கிலிபூபன், பொன்னேலிக்கோட்டை பெரியதம்பி, அழகு உடையார், துள்ளுக்குட்டி சேர்வை, வெள்ளிக்கட்டி வயிரவன், அதப்படக்கி சங்கிலி, கருப்பண்ணன் சேர்வை, மருங்கூர்த்தலைவர், முறையூர்ப்பாளையக்காரர், சூரக்குடிபாளையக்காரர், சிலாமேயநாட்டு சொக்கு சேர்வை, வெண்ணிசின்னதம்பி, நாகாடி இராமச்சந்திரன், மல்லாக்கோட்டை ஆண்டியப்பன், வாராப்பூர்பாளையக்க்ரர் சேதுபதியம்பலம், பெரியபிள்ளையம்பலம், காளாப்பூர்ப் பாளையக்காரர், கரிசைப்பட்டு வைத்தியலிங்க தொண்டைமான், சிறுவயல் நாகலிங்கம் சேர்வை, திருப்பத்தூர் வைரவன் சேர்வை, மானாமதுரை நாகலிங்கம், அருங்குளம் ஆறுமுகம் சேர்வை, தண்டியப்பன் சேர்வை, தென்னவராயன் புதுக்கோட்டை பூபன், ஒய்யத்தேவர், உடையார் ஆகிய தலைவர்கள் வசமுள்ள மக்கள் இப்போரில் பெருந்திரளாக பங்குகொண்டனர்.
இவர்கள் தவிர கள்ளர் பெருஞ்சனமும், பிரான்மலைக் கோட்டையிலிருத்த ராணுவத்தினரும் அதிகாரிகளின் கட்டளையை மீறி சீமை மீட்பு போரில் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை எல்லையில் காளாப்பூர் தொடங்கி சேதுநாட்டு எல்லையிலுள்ள பொன்னெலிக்கோட்டை வரையுள்ள பல்வேறு பகுதி மக்களும் கள்ளர், மறவர், அகம்படியார் என்றுமட்டுமல்ல பல்வேறு சமூக மக்களும் பேதாபேதமின்றிக் கலந்து கொண்டதால் தான் இந்த போரில் வெற்றி நெருக்கத்தில் வந்தது.

1780ல் மருது பாண்டியர்கள், நவாப் மற்றும் ஆங்கிலேய படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தி அவர்களை வெளியேற்றியது விடுதலை வேருக்கு நீர் பாய்ச்சிய பெருந்தொண்டு என்று பேராசிரியர் கே.இராஜையன் அவர்கள் தான் எழுதியுள்ள " SOUTH INDIAN REBELLION " என்ற புத்தகத்தின் 228 ம் பக்கத்தில் புகழாரம் சூட்டுகிறார்.

0 comments:

Post a Comment