Saturday, November 15, 2014

மருதுவால் கட்டப்பட்ட புதிய கோபுரம்! - வெல்ஷ்

காளையார்கோயிலுக்கு பலமுறை வந்துள்ள வெல்ஷ் தன் நூலில் இணைத்துள்ள காளையார்கோயில் வரைபடத்தில் "மருதுவால் கட்டப்பட்ட புதிய கோபுரம்" (the new pagoda built by murdoo (on the plan of caliacole) col J.welsh MILITARY REMINICENCES VOL 1 plan facing page 122) என குறிப்பிட்டுள்ளான்.

இந்த இராஜகோபுரத்தை மருதுபாண்டியர்கள் கட்டியகோபுரம் என்பதை விட கட்டிக்காத்த கோபுரம் என்று சொல்வதே சாலப்பொருத்தமுடையது.
உலகத்தமிழராயாச்சி நிறுவன வெளியீடு ஒன்றில் "குறிப்பிட்ட காலத்திற்குள் சரணடையாவிட்டால் காளையார்கோயில் பெரிய கோபுரம் தகர்க்கப்படும் என்று கர்னல் அக்னியு அறிவிக்க அந்த கோபுரத்தை காத்திட வெள்ளைமருது தன் வாழ்வைத்தியாகம் செய்தார்" ( col.agnew proclaimed that if he did not surrender with in a period, the big tower will be destroyed. so vella maruthu sacrificed his life in order to save the lofty gopuram - KALAIYARKOYIL'' -vide: DR.S.V.Subramanian & DR.G.RAJENDRAN (ed) "HERITAGE OF THE TAMILS -TEMPLE ARTS page 25"") என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தியாக நிகழ்ச்சி பற்றி 03.01.1970 தேதியிட்ட THE MAIL ஆங்கில நாளேட்டில் கட்டுரையும் வெளிவந்துள்ளது. அக்னியுவின் ஆலயக்கோபுர தகர்ப்பு அறிவிப்பு உலகுக்கு உண்மையை அறிவிக்கும் ஒரு அமில சோதனையாக அமைந்து விட்டது.

ஒரே குழந்தைக்கு இரண்டு பெண்கள் நான்தான் பெற்ற அன்னை குழந்தை என்னிடம் தரப்பட வேண்டும் என்று நீதிகேட்டு மன்னன் சாலமோனிடம் சென்றபோது அந்த மன்னன் ஒரு சோதனை வைத்து தீர்ப்பளித்தான்.
குழந்தையை இரு கூறாக வெட்டி ஆளுக்கொருபாதியாக கொடுங்கள் என்றான் மன்னன்.

போலி தாய் வெட்டுப்படட்டும் என்று அலட்டி கொள்ளாமலிருந்தாள்.
ஆனால் உண்மையான தாய் துடித்து போய் குழந்தை அவளிடம் போனாலும் பரவாயில்லை. வெட்டிவிடாதீர்கள் என்று கெஞ்சினாள். அவள்தான் உண்மையான தாய் என அந்த சோதனைமூலம் நிரூபணமாகியது.
கோபுரத்தை தகர்க்கிறேன் எனும் அக்னியுவின் அறிவிப்பை கேட்டு இராஜகோபுரத்தை கட்டியவர் என இட்டுக்கட்டி சொல்லப்படுகிறவர்கள் ஏன் தடுக்க முன்வரவில்லை? அவர் ஏன் வரப்போகிறார்? உண்மையில் அதை கட்டியவர் அல்லவா துடிப்பார்? அதனால் தான் மருதுபாண்டியர்கள் துடித்து போனார்கள். ஆயிரம் ஆதாரங்கள் எதற்கு? இது ஒன்று போதாதா?
பெற்றவளுக்கு தான் பிள்ளையின் அருமை தெரியும். கட்டியவர்களுக்கு தான் கோபுரத்தின் மகிமை புரியும். இந்த உண்மையை மேலும் உறுதி செய்யும் வண்ணம் சென்ற குடமுழுக்கின் பின் சமஸ்தான தேவஸ்தானம் இராஜகோபுர வாயிலின் தென்புறச் சுவரில் மேற்கண்ட தகவல் உள்ள கல்வெட்டு கொண்ட வெள்ளை சலவைக் கல்லை பதித்துள்ளது.

நன்றி: வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன்

0 comments:

Post a Comment