Monday, November 17, 2014

காளையார்கோயில் இராஜகோபுரம் உருவாவதற்காக நடந்த தொண்டுகளில் ஒன்று


நாட்டரசன்கோட்டையிலிருந்து 2 மைல் தொலைவில் குருவாட்டிப்பட்டி எனும் சிற்றூர் உள்ளது. இவ்வூரை சேர்ந்த ஆதிதிராவிட துறவி ஒருவர் கொல்லங்குடியிலிருந்தார். எப்போதும் மொட்டை தலையுடன் காட்சியளித்த அவரை மக்கள் மொட்டையப்பரதேசி என்றே அழைத்தனர்.

காளையார்கோயில் ராஜகோபுர திருப்பணிக்காக மேலூர் பக்கமுள்ள கருமலையிலிருந்து கற்களை ஏற்றி வந்த வண்டிகள் பூங்குடி, நாட்டரசன்கோட்டை, குருவாட்டிபட்டி, கொல்லங்குடி வழியாக காளையார்கோயில் போய் கொண்டிருந்தன.

இதை கண்ணுற்றார் மொட்டைய பரதேசி. எவ்வளவு பெரிய திருப்பணி இதிலே நமது பங்கும் ஒருதுளியாவது இருக்க வேண்டாமா? என்று அவர் உள்ளத்தில் தோன்றியது. அதன் விளைவு? கொல்லங்குடியில் வண்டிகள் செல்லும் சாலைக்கருகே ஒரு கூரை காவணத்தை போட்டார். பலரிடம் கையேந்தி வாங்கிய பணத்தில் ஒரு தண்ணீர் பந்தல் தொடங்கினார்.
"கடுமையான பாரத்தை ஏற்றிக்கொண்டு வருகிற வண்டிக்காரர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதலை தருகிறேன்" என்று சொல்வது போல் அமைந்தது அந்த தண்ணீர்ப்பந்தல். அவர் வழங்கிய நீரும் மோரும் வெயிலில் களைத்து வருகிற வண்டிக்காரர்களுக்கு அமுதமாக சுவைத்தன. சிலசமயம் பானகமும் வழங்கினார். இவ்வாறாக மோரும் பானகமும் அருந்திய வண்டிக்காரர்கள் கொஞ்சம் அயர்ந்துவிட்டனர். வண்டி குறித்த நேரத்தில் போய் சேர்வது இதனால் தாமதப்பட்டது.

காளையார்கோயிலில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த சின்னமருது பாண்டியருக்கு உடனடியாக காரணம் புரியவில்லை. கொல்லங்குடியில் தான் சுணக்கம், அதுவும் மொட்டையப்பரதேசியினால் தான் என்று தெரிய வருகிறது.
சின்னவர் ஆத்திரமாக புறப்பட்டார். இதை கேள்விப்பட்ட மொட்டையப்பரதேசி தாம் அரசரிடம் அனுமதி பெறாமல் தண்ணீர்பந்தல் வைத்து அதன் விளைவாக திருப்பணி தாமதப்படத் தான் காரணமானதால் தண்டனைக்கு ஆளாக நேருமோ என அஞ்சி கொல்லங்குடியிலிருந்து குருவாட்டிப்பட்டிக்கு ஓடிவிட்டார்.

சின்னவர் கொல்லங்குடி வந்தடைந்ததும் வண்டிக்காரர்கள் சோர்வாக அங்கிருந்து வண்டிகளை கிளப்பத் தயாராவதை பார்த்து நிறுத்தி விசாரித்தார்.
அவர் கொடுக்கிற மோர் பானகத்தினால் தான் தாங்கள் களைப்பு நீங்கி காளையார்கோயில் வரை தெம்புடன் வண்டியை ஓட்டி வர முடிகிறது என்றும் அவர் இன்று இல்லாதது தங்களுக்கு பெரும் பாதிப்பு என்றும் சின்ன பாண்டியரிடம் வண்டிக்காரர்கள் தெரிவித்தனர்.உடனே சின்னவர் நாம் செய்யவேண்டியதை அன்றோ அவர் செய்திருக்கிறார் என்று அகமகிழ்ந்து "மொட்டையப்பரதேசி எப்போதும் போல் தண்ணீர்ப்பந்தல் நடத்தலாம். உடனே சென்று அவரை அழைத்து வாருங்கள்" என்றார்.

மொட்டைப்பரதேசி அழைத்துவரப்பட்டார். அஞ்சியபடி தம் முன் வந்து நின்ற அவரிடம் சின்னப்பாண்டியர் "இனி நீர் தொடர்ந்து தண்ணீர்ப்பந்தல் நடத்தலாம். இதற்காக அருகிலேயே ஊருணி அமையும். தண்ணீர்பந்தலுக்கு நிரந்தரக் கட்டிடமாகவும் நீர்தங்கி கொள்ளவும் உமது பெயரால் இங்கு ஒரு மடம் நிறுவப்படும். தண்ணீர்பந்தல் பணத்தட்டின்றி நடைபெற குருவாட்டிப்பட்டியில் நிலம் மானியமாக விடப்படுகிறது" என்று கூறியதும் தன்னுடைய சிறு தொண்டையும் ஒரு பொருட்டாக கருதி போற்றும் சின்னப்பாண்டியரின் பெருந்தன்மையினால் மனம் உருகி அந்த துறவி கைகூப்பி நன்றியினை தெரிவித்தார்.

கொல்லங்குடி ஊருக்கு வடபுறம் மொட்டையப்பரதேசி மடம் என்ற பெயரால் வழங்கப்படும் மண்டபமும் ஊருணியும் சாதி, மத பாகுபாடின்றி இன்றைக்கும் செழிப்பாக பொதுமக்களின் தாகத்தையும், களைப்பையும் தீர்த்து வருகின்றது.

0 comments:

Post a Comment