Saturday, November 15, 2014

கர்னல் அக்னியுவின் தந்திரம்!

சிவகங்கை சீமைக்குள் நுழைந்த முதல் கட்டத்திலேயே போரில் தோல்வியை தழுவிய கர்னல் அக்னியு அந்த ஆத்திரத்தின் காரணமாக மருதுபாண்டியர்களின் பேரில் அவதூறுகளை அள்ளி வீசியும் போராளிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் பித்தலாட்டத்தை உள்ளடக்கியும் 1801 ஜுன் திங்களில் ஒரு எச்சரிக்கை பிரகடனத்தை விடுத்தான்.

பிரகடனத்தின் 3வது பாரா:-

கும்பினி சர்க்கார் சிவகங்கை சட்டப்பூர்வு வாரிசு எவராயிருப்பினும் அவருடைய நலனுக்கும், ஆதரவாளர்களுக்கும் கும்பினி அரசு பாதுகாப்பு அளிக்கும்.

சட்டப்பூர்வ வாரிசு தகுதி உடையவர் என கருதுகிறவர்கள் தாமதமின்றி கும்பினி முகாமிற்கு வர எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டு அவர்களின் கோரிக்கை பாரபட்சமின்றி பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

எதிர்ப்பாளர்கள் அவர்களது குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பின் வாரிசு உரிமை உடையவருக்கு கும்பினியரால் பட்டம் கட்டப்படும்.

பிரகடனத்தின் 4 வது பாரா:-

சிவகங்கை பட்டத்திற்கு உரிமையுடையவராக கருதுகிற எவரும் கும்பினி முகாமிற்கு வராது எதிர்ப்பாளி சின்னமருது அல்லது அவர்களணியில் சேர்ந்தால் அவர்களது பட்டத்துரிமை என்றென்றைக்கும் பறிமுதலாகிவிடும் என எச்சரிப்பதை கர்னல் அக்னியு தன் கடமையாக கருதுகிறார்.

பிரகடனத்தின் 5 வது பாரா:-

எதிர்ப்பாளர் சின்னமருதுவின் உடன்பிறப்பாளர் வெள்ளைமருது தன் தம்பியின் தீயநடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை என கர்னல் அக்னியுவிற்கு தெரியவருவதால் அக்னியு அவர்கள் குற்றவாளியை தண்டிக்கவும் ஏதுமறியா வெள்ளை மருதுவை காக்கவும் தீர்மானித்திருப்பதால் அவர் தன் குடும்பத்தினருடன் அக்னியுவின் முகாமிற்கு வந்து சேர்ந்தால் அவர்களை மதுரைக்கு பாதுகாப்பாக கூட்டி சென்று நிம்மதியாக வாழ வைக்க அக்னியுவால் அழைப்பு விடுக்கப்படுகிறது./
/மேற்கண்ட பிரகடனத்தில் 3வது பாராவில் கர்னல் அக்னியு தான் 'துட்ட நிக்கிரக சிட்ட பரிபாலனம்' செய்ய அவதாரம் எடுத்திருப்பவனை போல் அறிவித்து கொள்கிறான். உண்மையில் போராளிகளை இரண்டுபடுத்துவதே அவன் நோக்கம்.

அச்சூழ்ச்சியை நிறைவேற்ற 4 ஆவது பாராவில் வெங்கன் பெரிய உடையாத்தேவரையும் 5 ஆவது பாராவில் பெரியமருது பாண்டியரையும் இழுக்க முயலுகிறான். ஆனால் இறுதிவரை அது பலிக்கவில்லை.

"பாஞ்சாலங்குறிச்சி பட்ட பாட்டை அறிவீர்கள் அல்லவா? விருப்பாட்சி வீழ்ச்சி பற்றி கேள்வி பட்டதில்லையா? தேளி திணறித்திண்டாடியதை யாரும் தெரிவிக்கவில்லையா?" என்று சிவகங்கை மக்களை சிறுபிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டுவது போல் பயமுறுத்துகிறான். யாரும் மசியவில்லை என்றபின் சாதியை வைத்து பிரித்தாலும் சூதில் இறங்கி கௌரி வல்லபர் என்பவரை அதற்கு கேடயமாக பயன்படுத்தி தன் நோக்கத்தை சாதித்துக் கொண்டான்.

இன்றளவும் சிலர், அக்னியுவின் இது போன்ற அவதூறு பிரகடனங்களை ஆதாராமாக பிடித்து தொங்கிக் கொண்டு தலையும் இன்றி, வாலும் இன்றி மருதரசர்களின் புகழை கெடுக்க முயற்ச்சிப்பது நகைப்புக்குரியது.

0 comments:

Post a Comment