Monday, November 17, 2014

நாடுபிடிக்கும் ஆசையில் நவாப் நடத்திய நாடகங்கள்


வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதுபோல நவாப் மீண்டும் 1786ல் கிஸ்திகேட்டு தொல்லை தர தொடங்கினார். அதன் காரணமாக சிவகங்கையை கைப்பற்ற திட்டமிட்டார். இராமநாதபுரம் பணிந்தது. சிவகங்கை எதிர்த்தது. மருதுபாண்டியர்கள் கிஸ்திதொகை தர மறுப்பதாக புகார் செய்து சிவகங்கை சீமையை அடக்கி ஒடுக்க கும்பினியாரிடம் படை உதவி வேண்டினார்.ஆனால் அப்போது சென்னையில் ஆளுநராய் இருந்த சர் ஆர்ச்சிபால்டு காம்ப்பெல் (1786-89) காரணமின்றி ஒரு நாட்டின் மீது படையெடுப்பு நடத்த தயங்கினார்.

நவாபோ சிவகங்கை மீது எப்படியும் படை எடுப்பது என்று முடிவு செய்து விட்டதால் கும்பினி மேலிடத்தை சரிக்கட்ட ஏதாவது குயுக்தி முறையைக் கையாள்வது என திட்டமிட்டார் (DR.k.rajayyan "HISTORY OF MADURAI" page 306) . அதை நிறைவேற்ற தக்க தருணம் வரட்டுமென காத்திருந்தார்.
அதற்கு தோதாக பழைய ஆளுநர் மாறிவிட்டு ஜான் ஆலந்து (1789-90) எனும் புதிய ஆளுநர் வந்தார்.

நவாப் ஒரு நாடகத்தை நடத்த தொடங்கினார் ஒரு போலி கடிதத்தை வைத்து.
இந்த நாடகத்தின் கதாநாயகனான 09-05-1789 நாளிட்ட அக்கடிதத்தின் நடுப்பகுதி மட்டும் எஸ்.எம்.கமால் அவர்களின் மாவீரர் மருதுபாண்டியர் எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.

தலையும் வாலுமற்றதாக காட்சி தரும் அக்கடிதத்தை நவாப் கும்பினியாருக்கு அனுப்ப அவர்கள் அதை நம்பி செயல்பட்டனரா அல்லது நவாபிற்கு செலவுவைக்க படையை அனுப்பினார்களா என்பது புலப்படவில்லை.
கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர் வேலுநாச்சியாரோ, அவர் மகள் வெள்ளச்சியோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரின் அதிகாரம் பெற்றவரா என்பது பற்றி அந்நூலில் குறிப்பிடாதது சந்தேக மேகங்கள் படிய சந்தர்ப்பம் தருகிறது.

எழுதியவர் பற்றிய விவரத்துடன் முழுக்கடிதமாக இல்லாவிடினும் அந்நூலாசிரியர் தந்துள்ள அக்கடிதத்தில் உள்ளவை ஆய்வுக்குரியவனவாகும்.
"செய்தி 1 இதற்கு முன்பு நவாபும் நவாப் முத்தப்பார்கானும் வேலுநாச்சியாரை சந்தித்தனர். அப்பொழுது இராணி மருதிருவர் மீது புகார் தெரிவித்தார். செய்தி 2 கொல்லங்குடி நவாப் படையால் அடுத்த நாளே கைப்பற்றப்பட்டது, செய்தி 3 மருதிருவர் மறுபடியும் இராணிக்கு விரோதமாக செயல்படவே வேலுநாச்சி நவாபிற்கு புகார் செய்ய அவரை குத்புதீன்கான் என்பவன் பொறுப்பில் ஒப்படைத்தார். இவ்வளவு செய்தும் மருதிருவர் நடவடிக்கை ஏமாற்றம் தருகிறது"

மேலே கண்டவற்றை ஆழ்ந்து ஆய்வு செய்தால்... செய்தி 1ல் குறிப்பிடப்பெற்ற நவாப் முத்தப்பார்கான் என்று ஒருவர் நவாப் குடும்பத்திலேயே இல்லை (ஆதாரம்: வரலாற்று ஆசிரியர் மீ மனோகரன் அவர்களின் மருதுபாண்டிய மன்னர்கள் புத்தகத்தின் 62ம் பக்கத்திலுள்ள ஆர்க்காட்டு நலாபுகள் வம்சாவளி பட்டியல்).

செய்தி 2ல் சிவகங்கை மீது நவாப் படையெடுத்து வந்து கொல்லங்குடியை கைப்பற்றியதாக வருவது அதுவரை நடந்திராத ஒன்று. எந்த வரலாற்றாசிரியரும் குறிப்பிடவில்லை.

ஆனால் அதன்பின் நவாபிற்காக ஸ்டூவர்ட் கொல்லங்குடியை பிடித்தது. 13-05-1789 ஆம் நாள். கடித தேதியோ 09-05-1789! அவ்வாறெனில் பின்னால் நிகழ்ந்தது முன்பே கடிதத்தில் இடம் பெற்றது எப்படி? எடுத்த படையெடுப்பிற்கு காரணம் காட்ட பின்னால் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் தானே இது?
செய்தி 3ல் கூறப்படும் வாசகம் வேடிக்கையானது. அதில் 'மருது சேர்வைகாரர்கள் எனக்கும் என் அரசாங்கத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வந்ததை நவாப்பிற்கு தெரிவித்தேன். அவரும் என்னை குத்புதீன்கான் பொறுப்பில் வைத்து....' என்று யாரோ ஒரு நவாபிற்கு தெரிவித்ததாக நவாபிற்கே எழுதுகிறார் வேலுநாச்சியார். அவரும் குத்புதீன்கான் பொறுப்பில் வேலுநாச்சியாரை வைத்ததாகவும் எழுதியிருப்பதாக உள்ளது.
அப்படியானால் வேலுநாச்சியார் கடிதத்தில் விளித்த நவாப் யார்?
வேலுநாச்சியாரை குத்புதீன்கான் பொறுப்பில் விட்ட நவாப் யார்? - என்று தெளிவுபடுத்தவில்லை.

இராணியின் புகார் என்பதெல்லாம் நவாப் நடத்திய நாடகமே. உண்மையான காரணம் நவாபிற்கு ஏற்பட்ட பணத்தேவையே. மருதுபாண்டியர் உள்ள தொகையையே கொடுக்க மறுப்பவர்கள், இதில் கிஸ்தியை கூடுதலாக கேட்டால் கொடுக்கவே மாட்டார்கள். இதெல்லாம் தெரிந்த நவாப் சிவகங்கையின் யாரோ ஒரு ராணி பெயரால் நாடகமாடினார்.
கிஸ்திதொகை கேட்டு நவாப் அல்லது ஆங்கில படை சீமைக்கு வந்த போதெல்லாம் அரங்குக்கே வராதவர்கள் வேலுநாச்சியாரும், வெள்ளச்சியும்.
செஞ்சிக்கோட்டை ஏறியவனெல்லாம் தேசிங்கு ராஜனாகிவிடுவானா? ஆவணக்காப்பத்தில் இடம் பெற்ற கடிதம் என்பதால் அதிலுள்ளவற்றையெல்லாம் அரிச்சந்திரன் வாய்மொழிக்கிணையானது என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

வாதத்திற்காக வேலுநாச்சியார் மருதுபாண்டியர்கள் பேரில் புகார் அனுப்பியதாக எடுத்துகொண்டாலும் அதை தன் அண்டை நாட்டு அரசரும் உறவினருமான முத்துராமலிங்க சேதுபதிக்கு அனுப்பியிருக்கலாம். அல்லது மருதிருவர் யாரு பேச்சுக்கு கட்டுபடுவார்களோ அப்படிப்பட்ட மரியாதைக்குரிய திப்புசுல்தானுக்கு அப்புகாரை அனுப்பியிருக்கலாம்.
ஆனால் அவர் அதை யாருக்கு அனுப்பினாராம்?
தன்னுடைய கணவன் உயிரை பறித்த நவாப் முகமதலிக்கே வேலுநாச்சியார் அந்த 'அபய' கடிதத்தை அனுப்பினாராம்!
அதுவும் அவருடன் ஒத்துப்பாடுகிற ஆங்கிலேயரால் பேணிக்காக்கப்பட்ட ஆவணங்களுடன் இடம் பெற்றுள்ளதாம்!
ஆகா வேலிக்கு ஓணான் சாட்சி போல நவாபுக்கு ஆங்கிலேயர் ஆவணம் சாட்சி.

டாக்டர் கதிர்வேல் அவர்கள் தனது A HISTORY OF MARAVAS புத்தகத்தின் 180ம் பக்கத்தில் " eventhough the nawab conducted the yar on the pretext of helping the queen against the marudhus when the latter fled from the country the nawab sought to consolidate his gains.. the queen also was disapponted (நவாப் என்னவோ இராணிக்கு உதவுகிறேன் என்ற பொய்யான காரணத்தை சொல்லிக்கொண்டு மருதுகளுக்கு எதிராக இப்போரை நடத்தினார். மருது சீமையை விட்டேகியதும் நவாப் சிவகங்கையில் தன் இராணுல பலத்தை திரட்ட தொடங்கினார் இந்நிலையில் இராணி வேலுநாச்சியாரும் ஏமாற்றப்பட்டவரானார்)" என நவாப் நாடகத்தின் புதிரை அம்பலமாக்கி விடுகிறார் டாக்டர் கதிர்வேல்.

0 comments:

Post a Comment